SuperTopAds

திருமண அழைப்பிதழ்களை பயன்படுத்தி மிரட்டி கப்பம் பெற்ற பெண்கள் இருவர் உட்பட 3 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
திருமண அழைப்பிதழ்களை பயன்படுத்தி மிரட்டி கப்பம் பெற்ற பெண்கள் இருவர் உட்பட 3 பேர் கைது!

பத்திரிகைகளில் வெளியாகும் திருமண அறிவித்தல் தகவல்களை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட தரப்பினரை அச்சுறுத்தி கப்பம் கோரிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யக்கல பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வலான பொலிஸ் குற்றத்தடுப்பிரிவின் பொலிஸ் பரிசோதகரின் பெயரை பயன்படுத்தி பிலிமத்தலாவை  பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பத்திரிகையில் வெளியாகும் திருமண அறிவித்தல் தகவல்கள் மற்றும் அதில் காணப்படும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கப்பம் கோரியுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு திருமணம் தொடர்பில்  மேலதிக தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளார். 

குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் வேறு தொலைபேசி இலக்கத்தில் இருந்து வேறு ஒருவர் மூலம் அழைப்பு ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட பெண்ணின் தகவல்களை கூறி அவர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் யக்கல பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரும், அவருக்கு உதவியமை தொடர்பில் பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் இராணுவத்தில் கடமையாற்றிய ஒருவர் எனவும் அவர் சம்பந்தப்பட்ட தரப்பினரை அச்சுறுத்தி கப்பம் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வரும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் தமது தனிப்பட்ட தகவல்களை  வழங்க வேண்டாம் எனவும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும், பொலிஸ் அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்திக் தகவல்களை பெற்றுக் கொள்ளுதல் அல்லது கப்பம் கோரப்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துக்கு சென்று இது தொடர்பில் தெரியப்படுத்துமாறு அவர் மேலும் குறிப்பிட்டார்.