இன்னிக்கு ராத்திரி.. இந்த சாதனையை கோஹ்லி படைக்கப் போகிறார்!
டப்ளின்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி இன்று ஒரு பேட்டிங் சாதனையை நிகழ்த்தப் போகிறார். இந்தியா - அயர்லாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி டப்ளின் நகரில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் கோஹ்லி இந்த புதிய சாதனை படைக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்றைய போட்டியில் 17 ரன்கள் எடுத்தால், டி20 போட்டிகளில் அதி வேகத்தில் 2000 ரன்களைக் கடந்த வீரராக அவர் உருவெடுப்பார்.
தற்போது டி20 போட்டிகளில் 2000 ரன்கள் மற்றும் அதற்கு மேல் குவித்த வீரர்கள் இருவர்தான் உள்ளனர். அதில் முன்னணியில் இருப்பவர் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் (68 இன்னிங்ஸ்). இவர் 2271 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்த இடத்தில் இருப்பவர் நி்யூசிலாந்தின் முன்னாள் கேப்டன் மெக்கல்லம். இவர் எடுத்திருப்பது 2140 (66 இன்னிங்ஸ்கள்) ஆகும். பாகிஸ்தானின் சோயப் மாலிக் 1989 ரன்கள் எடுத்துள்ளார்.
தற்போது 5 இன்னிங்ஸ்களில் 1983 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார் கோஹ்லி. இன்னும் 17 ரன்களை எடுத்தால் அதி வேகமாக 2000 ரன்களைக் குவித்த வீரராக கோஹ்லி உருவெடுப்பார்.
அதிரடி வீரரான கோஹ்லி ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் சதங்களைக் குவித்திருந்தாலும் கூட டி20 போட்டிகளில் இதுவரை ஒரு சதம் கூட அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டூரில் அந்தக் கணக்கை அவர் நேர் செய்வார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்தியாவும், அயர்லாந்தும் அதிகம் விளையாடியதில்லை. இதுவரை மொத்தமே 4 முறைதான் மோதியுள்ளனர். கடைசியாக 2007ம் ஆண்டு பெல்பாஸ்ட் நகரில் இரு அணிகளும் ஒருநாள் போட்டி ஒன்றில் மோதியுள்ளனர்.
அயர்லாந்து 2 - இங்கிலாந்து 3 அயர்லாந்துடன் இரண்டு டி 20 போட்டிகளில் விளையாடவுள்ள இந்தியா, அதை முடித்த பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு 3 போட்டிகளில் ஆடவுள்ளது. அதன் பிறகு இங்கிலாந்துடன் 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா ஆடும்.