SuperTopAds

அழிக்கப்படும் வடமாகணத்தின் கடல்வளம் - மீனவர்களின் வாழ்வாதாரம்!! நலிவுறும் சுற்றுச் சூழல்...

ஆசிரியர் - Editor I
அழிக்கப்படும் வடமாகணத்தின் கடல்வளம் - மீனவர்களின் வாழ்வாதாரம்!! நலிவுறும் சுற்றுச் சூழல்...

இலங்கை - இந்திய நாடுகளின் நலன்களுக்கு நடுவில் இலங்கையின் வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

குரங்குகளை ஏற்றுமதி செய்யகூடாது என கூப்பாடுபோடும் ஜீவகாருண்யம் மிக்க மனிதர்களால் ஏற்கனவே நலிந்துபோயுள்ள ஒரு சமூகம் மெல்லச் சாவதை பாதுகாக்கப்படவேண்டிய கடல்வளம் மலடாக்கப்படுவதை கண்டுணர முடியாத குறுட்டுநிலை கவலைக்குரியது.

ஆம் இந்திய - இலங்கை இழுவை இழுவை படகுகளால் வடமாகாண மீனவர்கள் மெல்லச் சாவதை/ அளப்பரிய கடல்வளம் அழிக்கப்படுவதை குறித்து பேசுவதே இந்த தொடக்கத்தின் நீட்சி...

இழுவை படகுகள் இந்தியாவில் மட்டுமே உள்ளதாகவும் அவை மட்டுமே கடல் வளத்தை அழிப்பதாகவும் பலர் நினைத்துக் கொண்டிருப்பதை சமகாலத்தில் காண்கிறோம்.

ஆனால் அதில் பெரிதும் நியாயம் இருந்தாலும் முற்றுமுழுதான உண்மை அதுவல்ல. எங்களுடைய வடமாகாணத்திலும் இழுவை படகுகளை பயன்படுத்தி கடற்றொழில் செய்யப்படுகிறது.

அது இடைமடி வலைகளையே பாவிக்கிறார்கள் அடிமடி வலைகளை பாவிப்பதில்லை என சிலர் நியாயப்படுத்தினாலும் அது பாதிப்பு.. பாதிப்பே என்கிறார்கள் பாரம்பரிய மீனவர்கள்.

ஒப்பீட்டளவில் இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் அடிமடி வலைகள் பெரும் அழிப்பை செய்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

வடமாகாணத்தில் 50,310 குடும்பங்கள் தமது அடிப்படை வாழ்வாதாரமாக கடல் மீன்பிடியை நம்பியுள்ளனர். மேலும் 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் மீன்பிடித் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியுள்ளனர் என மீன்பிடி அமைச்சகத்தின் 2020 அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் 2021 ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் மற்றும் ருஹுன பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில், இந்திய மீனவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவதாக  மேற்கோளிட்டுள்ளது.

இதனால் சில இடம்பெயர முடியாத மீன் இனங்கள் அழிந்துவிட்டதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி கணபதிப்பிள்ளை அருளானந்தன் கூறுகிறார்.

மேலும் மீன்களின் இனப்பெருக்கத்திற்குதவும் பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்கள் ஆகியவற்றை ரோலர் அல்லது இழுவை மடி மீன்பிடி முறையால் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அருளானந்தன் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் 2017 இல் இழுவைமடி தொழிலை தடை செய்தாக கூறப்படும்போதும் உள்ளூரில் உள்ள இழுவை படகு தொழிலாளிகள் பாரம்பரிய மீன்படி முறைக்கு மாறுவதற்கான கால அவகாசத்தை வழங்குவதாக கூறி காலம் கடந்ததை தவிர ஆனது ஒன்றுமில்லை.

இந்திய இழுவை படகுகள் 6 சிலின்டர் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பாரிய கடல் கலங்களை பயன்படுத்துவதுடன் சிறிய கண் உள்ள வலைகளையே பயன்படுத்துகிறார்கள் எனவும் அதனால் மீன் குஞ்சுகள் தொடக்கம் எதுவும் தப்புவதில்லை எனவும் வடமாகாண மீனவர்கள் கூறுகின்றனர்.

ஒட்டுமொத்தமாக வளத்தை அழிப்பதோடு வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இழுவை படகு தொழிலை முற்றாக நிறுத்துமாறும் இந்திய இழுவை படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடிப்பதை தடுக்குமாறும் வடமாகாண மீனவர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

காலத்திற்கு காலம் பேச்சுவார்த்தைகள்/ தீர்வு யோசனைகள்/ தடைச்சட்ட வரைபுகள் என எத்தனை வந்தாலும் அத்தனையும் பேச்சளவில் முடிந்துபோன நிலையில் அரசியலுக்கான வீராவேசங்களை மட்டும் அவ்வப்போது கனதியாக காண முடிகிறது.

இந்திய இழுவை படகுகள் இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் எல்லைதாண்டிய குற்றச்சாட்டின் கீழேயே அவர்களுக்கான தண்டணை வழங்கப்படுகிறது.

இலங்கை கடல் எல்லைக்குள் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளானபோது கடல் சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடு செய்யப்பட்டு இலங்கை அரசாங்கத்தினால் அதற்கு இழப்பீடும் கோரப்பட்டது.

ஆனால் இந்தி இழுவை படகுகளால் தினசரி ஏற்படுத்தப்படும் கடல்வள அழிப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது எமது மீனவர்களின் கேள்வியாக உள்ளது.

மேலும் கரையிலிருந்து சில கிலோ மீற்றர்கள் தூரம் பயணித்து பிடித்த அதே அளவு மீனை பிடிப்பதற்காக இன்று 25 தொடக்கம் 30 கிலோமீற்றர் தூரம் பயணிக்கவேண்டியுள்ளதாக யாழ்.குடாநாட்டு மீனவர்கள் கூறுகின்றனர்.

அதற்கும் மேலதிகமாக தினசரி பல லட்சம் பெறுமதியான வலைகளை தினசரி இந்திய மீனவர்கள் அழித்து வருகின்றனர்.

இதற்கொரு தீர்வு இல்லையா? என கேட்டால் இல்லாமல் இல்லை. இந்தியாவில் இழுவைமடி தொழில் தடைசெய்யப்படாவிட்டாலும் அதன் பாதிப்பை உணர்ந்த தரப்புக்கள் உள்ளன.

குறிப்பாக தமிழ்நாடு இயந்திரமயமாக்கப்பட்ட மீனவர் நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால் பிரச்சனை அதிகரித்துள்ளதாகவும்

“இந்த இழுவை மடி வலைகளுக்கு நான் மிகப்பெரிய எதிரி,” என்று  கூறியுள்ளார்.

இவ்வாறான நிலைப்பாடு இந்தியாவிலேயே உள்ள நிலையில் இந்த பிரச்சினைக்கான தீர்வு சாத்தியப்படாத ஒன்றல்ல என்பதுடன் இலங்கை இந்த விடயத்தில் நெகிழ்ச்சத் தன்மையற்ற தீர்மானத்திற்கு தயாராக உள்ளபோதே அது சாத்தியம். ஆனால் வெளிவிவகார அமைச்சர் பாஸ் நடைமுறையை அறிமுகம் செய்து இந்திய மீனவர்களை உள்ளே அனுமதிக்கலாம். அதற்கு பணமும் அறவிடலாம் என்கிறார் ஆனால் கடற்றொழில் அமைச்சர் அப்படி இல்லை என்கிறார்.

இந்தியாவில் மீன் பெருகுவதற்காக மீன்படி தடைக்காலம் கடைப்படிக்கப்படும் நிலையில் இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு எமது கடல்வளத்தை இந்திய இழுவை படகுகள் அழிப்பதை வேடிக்கை பார்ப்பது இராஜதந்திர நலன்கள் என்ற தூக்கு கயிற்றில் எமது மீனவர்களை தூக்கிலிடுவது அப்பட்டம்..

சீன மக்களின் உணவுக்காக எமது பாரம்பரிய மீனவர்களின் தொழில் இடங்களை தாரைவார்த்து எமது மீனவர்களில் வயிற்றில் ஈர துண்டு கட்டுவோருக்கு உறுத்த வாய்ப்பில்லை.. 

த.வினோயித்..