12 வயதில் கிராண்ட்மாஸ்டரான சென்னை சிறுவன் : யார் இந்த பிரக்ஞானந்தா?

ஆசிரியர் - Editor2
12 வயதில் கிராண்ட்மாஸ்டரான சென்னை சிறுவன் : யார் இந்த பிரக்ஞானந்தா?

உலகில் மிக இளம் வயதில் செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது நபராகியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா. 12 வருடம் 10 மாதம் 13 நாட்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றதன் மூலம் இந்தியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.

கோடி பேர் புழங்கும் சென்னையில் இருந்து சென்று, இத்தாலி நாட்டில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தாயகமாக இருக்கும் ஊர்டிஜெய் எனும் சிறு ஊரில் நடந்த நான்காவது க்ரெடின் ஓபன் 2018 தொடரில், இறுதிச் சுற்றில் விளையாடுவதற்கு முன்னரே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா.

க்ரெடின் ஓப்பனில் 16 வயது இரான் வீரர் கொலாமி ஆர்யனை அபாரமாக வென்ற பின்னர் எட்டாவது சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த 17 வயது கிராண்ட் மாஸ்டர் மோரொனி லூகாவை வென்றார். இதன் மூலம் ஒன்பதாவது சுற்றில் 2482 ரேட்டிங் மேல் வைத்துள்ள வீரரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் மூன்றாவது முறையாக கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்து தகுதி பெற்றார்.

நெற்றியில் பட்டை, எண்ணெய் வைத்து வகுடெடுத்து வாரிச்சீவப்படாத தலைமுடி, அமைதியான முகம் - எளிமையான முகத்தோற்றமும் பெருஞ்சாதனைகளுக்கும் மிகச்சிறிய புன்னகையை வெளிப்படுத்தும் சிறுவன் பிரக்ஞானந்தா.

கடந்த சனிக்கிழமை உலகிலேயே இரண்டாவது இளவயது கிராண்ட்மாஸ்டர் எனும் சிறப்பை பெற்றார். பதின் பருவத்தை எட்டுவதற்கு முன்னதாக கிராண்ட் மாஸ்டர் ஆனது உலகிலேயே இருவர்தான். ஒருவர் பிரக்ஞானந்தா, மற்றொருவர் உக்ரைனைச் சேர்ந்த செர்கே கர்ஜாகின்.

கடந்த 2002-ம் ஆண்டு தனது 12 வருடம் ஏழு மாதத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று உலகின் மிகக் குறைந்த வயது கிராண்ட்மாஸ்டர் எனும் சிறப்பை பெற்றார் செர்கே கர்ஜாகின். அவரது சாதனையை உடைக்க பிரக்ஞானந்தாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. எனினும் முந்தைய தொடரில் கிடைத்த தோல்வியை பொருட்படுத்தாமல் நம்பிக்கையுடன் இத்தாலி க்ரெடின் ஓபன் 2018 தொடரை எதிர்கொண்டதன் மூலம் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தையும் இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தை வைத்திருந்த பரிமார்ஜன் நெகியின் சாதனையையையும் தகர்த்துள்ளார்.

சென்னை சிறுவனின் வெற்றிக்கு பின்னணியில் இருந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் போலியோவால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை ரமேஷ்பாபு.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த ரமேஷ்பாபு தமிழக அரசின் கூட்டுறவு வங்கியில் 23 வயதில் பணிக்குச் சேர்ந்தார். தற்போது சென்னையிலுள்ள கொரட்டூரில் கூட்டுறவு வங்கி கிளையொன்றின் மேலாளராக பணிபுரிகிறார்.

ரமேஷ்பாபு - நாகலட்சுமி தம்பதிக்கு இரு குழந்தைகள். இவர்களது பெண் வைஷாலியும் செஸ் போட்டியில் அசத்திக்கொண்டிருக்கிறார்.

செஸ் விளையாட்டுக்கும் ரமேஷ்பாபுவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தனது மகன் எப்படி கிராண்ட் மாஸ்டர் ஆனார் எனும் கதையை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு.

'' எனது மகள் வைஷாலியை செஸ் வகுப்பில் சேர்த்துவிட்டிருந்தேன். அவள் நன்றாக விளையாடினாள். ஆனால் செஸ் விளையாட்டு போட்டிகளில் பெரிய நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும். குடும்ப சூழ்நிலை பொருளாதார சூழ்நிலை எல்லாம் கருத்தில் கொண்டு எனது மகனை செஸ் விளையாட்டில் ஈடுபடுத்தக்கூடாது என்றுதான் திட்டமிட்டேன். ஆனால் நான்கு வயது இருக்கும்போதே அக்காவுடன் செஸ் போர்டில் நிறைய நேரத்தை செலவிட்டார் பிரக்ஞானந்தா.

தன் வயது சிறுவர்களுடன் நேரத்தை செலவிடாமல் 64 கட்டங்களின் மேல் என் மகன் கொண்டிருந்த காதல் எனது எண்ணத்தை மாற்றியது'' என்கிறார் ரமேஷ் பாபு.