இங்கிலாந்து அணியின் பயிற்சித் திட்டங்கள் கசிந்தது - திட்டமிட்ட செயலா?
மாஸ்கோ: கால்பந்து உலகக்கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து பனாமா அணிக்கு எதிரான தன் திட்டத்தை பயிற்சியின் போது தவறுதலாகக் கசிய விட்டுள்ளது.
அதன்படி, துனிசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இடம் பெற்ற ரஹீம் ஸ்டெர்லிங் வெளியேற்றப்படுவார் என தெரிகிறது. இங்கிலாந்து அணியின் மேலாளர் கேரெத் சவுத்கேட் எழுதி வைத்திருந்த அணித் திட்டங்களை அவரது உதவியாளர் ஸ்டீவ் ஹாலந்து, பயிற்சியின் போது எடுத்து வந்திருந்தார்.
அப்போது, எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், அந்த திட்டம் அடங்கிய தாள்களில் ஒரு பகுதி தெளிவாக தெரிகிறது.
அந்த திட்டங்களின்படி, காயத்தில் இருக்கும் டேல் அலிக்கு பதில், ரூபன் லோப்டஸ்-சீக் ஆடுவார் எனவும், மார்கஸ் ரஷ்போர்டு மற்றும் ஹாரி கேன் ஆகியோர் முன் வரிசையில் இடம் பெறுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர்த்து, ஜோர்டான் பிக்போர்டு, கைல் வாக்கர், ஜான் ஸ்டோன்ஸ், கீரான் ட்ரிப்பியர், ஜோர்டான் ஹெண்டெர்சன், மற்றும் ஜெஸ்ஸி லின்கார்ட் விளையாடும் வீரர்களில் முதல் விருப்பமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இடது பக்கம் ஆடும் வீரர்களின் பெயர்கள் சரியாக தெரியாதபடி, ஸ்டீவின் ஹாலந்தின் கைகள் மறைத்துள்ளன. இப்பொழுது, இங்கிலாந்து அணியின் திட்டங்கள் வெளியான நிலையில், அடுத்து அணியில் ஏதும் மாற்றங்கள் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அணி மேலாளர் சவுத்கேட்டை பொறுத்தவரை, அணி வீரர்கள் தெளிவாக பயிற்சி செய்யும் நோக்கில் பல நாட்கள் முன்னரே விளையாடும் பதினோரு வீரர்களை முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது. தற்போது உள்ள நடைமுறைப்படி, இரண்டு நாட்கள் இருக்கும் போது மட்டுமே அணியில் விளையாடும் பதினோரு வீரர்களின் பெயர்கள் மற்ற நாடுகள் முடிவு செய்கின்றன. இது, அவர்களின் திட்டம் கசியாமல் இருக்கவும் உதவும். சிலர், இங்கிலாந்தின் திட்டம் கசிந்தது ஒரு திட்டமிட்ட செயலாக இருக்கலாமோ என சந்தேகம் எழுப்பியுள்ளார்கள். இதன் மூலம் பனாமா அணிக்குத் தவறான தகவல் அளித்து குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டமாக இருக்கலாம்.
பயிற்சி பெறும் இடத்தை சுற்றி சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு மதில் எழுப்பியுள்ள நிலையில், உள்ளே நுழையமுடியாத புகைப்படக்காரர் எப்படி அணி திட்டம் அடங்கிய தாள்களை சரியாக படம் பிடித்தார் என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது.
அதே போல, சவுத்கேட் நடத்திய அணிக் கலந்தாய்வில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்த தகவல்களும் கசிந்துள்ளது. அதன்படி, சவுத்கேட் தன் வீரர்களிடம் பனாமா அணிக்கெதிரான ஆட்டத்தில், காயம் ஏற்படும் வகையில் எதிரணி ஆடலாம் எனவும், அதற்குத் தயாராக இருக்கும்படி தன் வீரர்களை எச்சரித்ததாகவும் தெரிகிறது.