ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை! இவ்வார இறுதிக்குள் பதில் வழங்கப்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை...
க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடர்பாக இவ்வார இறுதிக்குள் தீர்க்கமான பதில் வழங்கவேண்டும். இல்லையெனில் கல்வித்துறை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று (19) புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு ஆசிரியர்கள் சமூகமளிக்கவில்லை என்ற பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. இதனை என்னால் பாராளுமன்றத்தில் தெரிவிக்க முடியாது. பாராளுமன்றத்திற்கும் நாட்டுக்கும் கூறுவதற்கான பதிலையே நான் எதிர்பார்க்கின்றேன்.
பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஆசிரியர்கள் கலந்து கொள்ளாமலிருப்பதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் காணப்படுவதாக கல்வி அமைச்சர் குறிப்பிடுகின்றார். இவ்வாறான காரணிகளை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பாதிக்கும் இது போன்ற செயற்பாடுகளை தவிர்ப்பதற்காக கல்வித் துறை குறிப்பாக பரீட்சை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக்கப்பட வேண்டும்.
கல்விப் பொதுத் தராதர பரீட்சைக் குழு இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தமது பிள்ளைகளின் பெறுபேறுகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு பொறுப்பான பதிலை வழங்க வேண்டுமல்லவா?
எனவே எம்மால் இவ்விடயத்தில் பொறுப்பற்று செயற்பட முடியாது. இதற்கு முன்னர் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் கலந்து கொண்ட ஆசிரியர்களில் பெருமளவானோர் தற்போதும் சேவையில் உள்ளனர். மாணவர்களின் கல்வியை இடை நிறுத்த எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.
எனவே கல்வித்துறையை அவசர நிலைமையின் கீழ் கல்வித் துறையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அடுத்த வாரம் சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்படும்.
தொழில் சட்டங்கள் குறித்து அச்சமடைய வேண்டாம். பரீட்சைகளையும் , பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகளையும் தடையின்றி நடத்துவதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். இவ்வாரத்திற்குள் இதற்கான தீர்வினை உரிய தரப்பினர் வழங்க வேண்டும்.
அவ்வாறில்லையெனில் அமைச்சரவை பொறுத்தமான தீர்மானத்தை எடுக்கும் என்றார்.