இங்கிலாந்து முத்தரப்பு தொடர் - நிக் கபின்ஸ் சதத்தால் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து லயன்ஸ் அணி
இந்தியா ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது.
முதல் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தியா ஏ அணி சார்பில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 55 பந்துகளில் 64 ரன்கள் அடித்து அவுட்டானார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன்களுடனும், ஷுபமன் கில் 37 ரன்களுடனும் வெளியேறினர்.
மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் இந்தியா ஏ அணி 46.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பில் லியாம் டாசன் 4 விக்கெட்டுகளும், டாம் ஹெல்ம் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து லயன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய நிக் கபின்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு சாம் ஹைன் ஒத்துழைப்பு தந்து அரை சதமடித்து 54 ரன்களில் அவுட்டானார்.
இதனால் இங்கிலாந்து லயன்ஸ் அணி 41.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிக் கபின்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் எடுத்தார்.
இந்தியா ஏ சார்பில் ஷ்ர்துல் தாகுர் 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.