கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய தலைவர்
ஐ.பி.எல் ரி-20 தொடரில் விளையாடும கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைவராக இடதுகை துடுப்பாட்ட வீரர் நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக சிரேயாஷ் ஐயர் செயற்பட்டுவந்த நிலையில், உபாதை காரணமாக முதற்பாதி போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்ற அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சிரேயாஸ் ஐயரின் முதுகுப்பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்தது. இவர் தற்போது குணமடைந்து வருகின்ற நிலையில், தொடரின் பிற்பாதியில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் சிரேயாஸ் ஐயர் தொடரின் ஆரம்ப பகுதியில் விளையாடாத காரணத்தினால், அவரின் இடத்துக்கு நிதிஷ் ராணா இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா அணியில் சுனில் நரைன், அன்ரே ரசல் மற்றும் நியூசிலாந்து அணியின் தலைவர் டிம் சௌதி போன்ற அனுபவ வீரர்கள் இருந்தாலும், நிதிஷ் ராணாவுக்கு இந்த தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தங்களுடைய முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை, எதிர்வரும் முதலாம் திகதி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.