SuperTopAds

மாணவர்களின் காலை உணவுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய பாடசாலை அதிபர்!

ஆசிரியர் - Editor I
மாணவர்களின் காலை உணவுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய பாடசாலை அதிபர்!

பாடசாலை ஒன்றின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் காலை உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் குறித்த பாடசாலை அதிபர் தனது கணவருக்கு பிறந்தநாள் கொண்டாடியதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது. 

மெதிரிகிரிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

அரசாங்கத்தின் பாடசாலை மாணவர்களுக்கான உணவுத் திட்டத்தின் கீழ், குறித்த ஒரு பிள்ளைக்கு 100 ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதன்படி, இப்பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் 720 மாணவர்கள் கல்வி பயின்று வருவதால் நாளொன்றுக்கு 72 ஆயிரம் ரூபா‍வை அரசாங்கம் வழங்குகிறது.

டிசம்பர் 05, 2022 அன்று அதிபரின் கணவரின் பிறந்தநாள் விழாவிற்கு, உணவு ஒப்பந்தக்காரர் பாற்சோறு, கொக்கிஸ், கட்லட் மற்றும் கடலை போன்றவற்றை சமைத்துள்ளார். 

இதற்காக பிள்ளைகளின் உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை அதிபர் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தினத்தன்று, பிள்ளைகளுக்கு உணவு வழங்கப்பட மாட்டாது என்றும், 

பிள்ளைகள் வீட்டிலிருந்து உணவைக் கொண்டு வருமாறும் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த தினத்தன்று பிள்ளைகளுக்கு உணவு வழங்கப்பட்டதாகவும், 

அதற்கான 'வவுச்சரில் ' கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயம் குறித்து மாணவர்களது பெற்றோர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன், குறித்த அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் 

கல்வி அமைச்சை கேட்டுள்ளனர்.அதிபரின் கணவரும் அப்பகுதியிலுள்ள வேறொரு பாடசாலையின் அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.