குட்டிமணி அன்று சொன்னது இன்று நிதர்சனமாகியுள்ளது! பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து யாழில் வசந்த முதலிகே...
பயங்கரவாத தடைச்சட்டம் ஒருநாள் தென்பகுதி மக்களையும் பாதிக்கும் என குட்டிமணி அன்று தொிவித்த கருத்து இன்று நடந்து கொண்டிருப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே யாழில் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை யாழ் ரிப்பன் மண்டபத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற பொது சொற்பொழிவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக ஐனநாயக போராட்டங்களில் பங்கு பெற்றுபவர்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர்.
குட்டிமணி பல வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டபோது பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஒரு கருத்தை முன்வைத்தார். குறித்த சட்டம் என்றோ ஒருநாள் தெற்கு மக்களையும் பாதிக்கும் காலம் வரும் என்றார்.
இப்போது அதை உணரக்கூடிய உள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் நாட்டிலிருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் அதற்காகவே நாம் போராடுகிறோம். ஆனால் ரணில் ராஜபக்சவினர் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோன் எனத் தெரிவித்து
பெயரை மட்டும் மாற்றி மீண்டும் அதே சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற போர்வையில் புதிய சட்டத்தை அமுல்படுத்தி மாவட்டத்துக்கு பெறுப்பாகவுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கைது செய்வதற்கோ
பிணை வழங்குவதற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. ஆகவே குறித்த சட்டம் மிகவும் ஆபத்தான சட்டமாக காணப்படுவதால் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.