கால்பந்து உலகக்கோப்பை: இந்தியாவுக்கான 'மெஸ்ஸி' எப்போது கிடைப்பார்?
7.6 பில்லியன் - இது உலகின் சராசரியான மக்கள் தொகை.
736 - இது 2018 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை.
0 - இதுநடப்பு உலகக்கோப்பையில் இடம்பெற்ற இந்திய வீரர்களின் எண்ணிக்கை.
நீண்டகாலமாக உலகக்கோப்பைக்கு இந்தியா தகுதிபெறாதது அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட இந்தியா எப்போது தகுதிபெறும்?
ஒரு தொழில்முறை கால்பந்தாட்டக்காரராக ஆவதற்கு ஏராளமான தியாகங்களும், கடின உழைப்பும் தேவை.
உடல்ரீதியாக, மனரீதியாக, தந்திரோபாயமாக ஒரு வீரர் சிறந்த நிலையில் இருத்தல் வேண்டும். இதனுடன் ஆர்வம், விளையாட்டு உள்கட்டமைப்பு பல ஆயிரம் மணி நேர பயிற்சி ஆகியவை உடன்சேரும்போது ஒரு மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர் உருவாகிறார்.
கால்பந்து உலகில் இந்தியா ''தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஜாம்பவான்'' என்று ஃபிஃபா அமைப்பின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் ஒருமுறை குறிப்பிட்டார். ஆண்கள் கால்பந்து அணிகளின் தரவரிசையில் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா பல இடங்கள் முன்னேறியுள்ளது. 2014-ஆம் ஆண்டில் 170-வது இடத்தில் இருந்த இந்தியா, 2018-ஆம் ஆண்டில் 97-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
மேலும், ஐஎஸ்எல், ஐ-லீக் மற்றும் இளையோர் லீக் போன்ற போட்டி தொடர்களும் இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேலும் பிரபலமாக்கியுள்ளன.
ஆனால், இவை மட்டும் போதுமா? ஃபிஃபா உலகக்கோப்பையில் தங்கள் அணி விளையாடுவதை காண இந்தியர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?