200 ரூபா இலஞ்சம் பெற்ற தனியார் பேருந்து உத்தியோகத்தருக்கு மார்ச் 14 வரை விளக்கமறியல்
அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபையில் பணியாற்றும் கல்முனை பிராந்திய நேரகட்டுப்பாட்டு உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதன்கிழமை (08) கொழும்பில் இருந்த வருகை தந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபையில் பணியாற்றும் கல்முனை பிராந்திய நேரகட்டுப்பாட்டு அலுவலகம் முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் குறித்த உத்தியோகத்தர் நடத்துநர் ஒருவரிடம் இலஞ்சத்தினை பெற்றபோது கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அம்பாறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி வரை மொனறாகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ரூபா 200 இலஞ்சமாக பெற்றதாக கூறப்படும் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை கல்முனை பிராந்திய உத்தியோகத்தர் பேரூந்து நடத்துநர் ஒருவரிடம் வேலை ஒன்றினை செய்வதற்காக குறித்த தொகையினை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபையின் கல்முனை பேருந்து நிலையத்தில் கடமையாற்றும் நபர் தனியார் பேருந்து நடத்துநர்களிடம் இலஞ்சம் பெற்றுகொள்வதாக தொடரச்சியாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தகக்து.