SuperTopAds

9 இலக்குகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது அவுஸ்ரேலியா

ஆசிரியர் - Editor II
9 இலக்குகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது அவுஸ்ரேலியா

இந்தியா - அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் தொடரின் 3 ஆவது டெஸ்ட் இந்தூரில் ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்ச்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 109 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் சகல இலக்குகளையும் இழந்தது. தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 இலக்குகளை இழந்து 156 ஓட்டங்களை எடுத்தது. 

இதையடுத்து 47 ஓட்டங்கள் 2 ஆம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்ரேலியா அணி வெறும் 11 ஓட்டங்கள் இடைவெளியில், எஞ்சியிருந்த 6 இலக்குகளையும் பறிகொடுத்து 197 ஓட்டங்களுடன் சகல இலக்குகளையும் இழந்ததுடன் 88 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. 

இதற்கடுத்து களமிறங்கிய இந்திய அணி, 2 ஆவது இன்னிங்சில் 163 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்து மொத்தம் 75 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதன் மூலம் அவுஸ்ரேலியா அணிக்கு இந்தியா 76 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 3 ஆவது நாள் ஆட்டம் ஆரம்பமானது. முதல் பந்துப் பரிமாற்றத்தை தமிழக வீரர் அஸ்வின் வீசினார். 2 ஆவது பந்திலேயே கவாஜா இலக்கை வீழ்த்தினார். இதனையடுத்து லபுசேன் - ஹேட் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். 

இறுதியில் அவுஸ்ரேலியா அணி 18.5 பந்துப் பரிமாற்றங்களில் 78 ஓட்டங்களை எடுத்து 9 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி நடக்கவுள்ளது.