SuperTopAds

அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி! ஆதாரவாளர்களால் காப்பாற்றப்பட்ட அனுரகுமார திஸநாயக்க....

ஆசிரியர் - Editor I
அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி! ஆதாரவாளர்களால் காப்பாற்றப்பட்ட அனுரகுமார திஸநாயக்க....

தேசிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் காரணமாக, காயமடைந்த 20 பேர் தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

கொழும்பு விகாரமஹா தேவி பூங்கா அருகே ஆரம்பமான தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணி யூனியன் பிளேஸ் பிரதேசத்தில் நுழைந்த போது பொலிசார் அதனைத் தடுத்து நிறுத்த முயன்றனர்.

அப்பிரதேசத்தில் பிரவேசிப்பதைத் தடை செய்யும் வகையில் கோட்டை மற்றும் மருதானைப் பொலிசார் நீதிமன்ற தடை உத்தரவுகள் இரண்டைப்பெற்றிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாது வீதிகளை மறித்து நின்றனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு பிரயோகத்தில் பலர் காயமடைந்திருந்தனர். தற்போது காயமடைந்தவர்கள் அனைவரும் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை பொலிஸாரின் தாக்குதலில் இருந்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆதரவாளர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.