SuperTopAds

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடனுதவி மார்ச் இறுதிக்குள்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

ஆசிரியர் - Editor I
சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடனுதவி மார்ச் இறுதிக்குள்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

இலங்கைக்கும் - சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளதாகவும், மார்ச் மாத இறுதிக்குள் முதற்கட்ட கடனுதவி கிடைக்கும் எனவும் அமைச்சரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கூறியுள்ளார். 

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (21) இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டால் 2.9 பில்லியன் கடனுதவி மாத்திரமின்றி இடை நிறுத்தப்பட்டுள்ள ஏனைய அபிவிருத்தி திட்டங்களுக்கான கடனுதவிகளையும் விடுவிப்பதற்கு ஏனைய நாடுகள் முன்வரும்.

எனவே முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ள அபிவிருத்தி பணிகளையும் எம்மால் மீள ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும். அபிவிருத்திகளுக்கான கடனுதவியை வழங்குமாறு எம்மால் இராஜதந்திர அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது. 

அவை பேசி தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளாகும். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டால் இவ்வனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இதற்காக பிரான்ஸின் லசார்ட் நிறுவனம் , கிளிபர் ஹான்ஸ் நிறுவனம் , இலங்கை மத்திய வங்கி , திறைசேரி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பன இணைந்து செயற்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் மார்ச் இறுதிக்குள் இணக்கப்பாட்டை எட்ட முடியும் என நம்புவதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்தார் என்றார்.