அடகுவைத்த மோட்டார் சைக்கிளை மீட்க பணம் இல்லாததால் தம்மை புலனாய்வாளர்கள் என கூறி அயல் வீட்டில் கொள்ளையிட முயற்சி! இருவர் சிக்கினர், ஒருவர் தலைமறைவு...
தம்மை பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் என கூறிக்கொண்டு வீடொன்றுக்குள் நுழைந்து கொள்ளையிட முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
கைதானவரை தடுப்புக் காவலில் வைக்கும் படி கண்டி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,அளவத்துகொடைப் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் படி சி.சி.ரி.வி.யின் உதவியுடன் ஒருவரைக் கைது செய்து
விசாரித்தபோது பின்வரும் தகவல் வெளியாகியுள்ளது. அளவத்துகொடை பொலிஸ் பிரதேசத்தை சேர்ந்த விலானகம என்ற இடத்தில் ஒருவர் தனது மோட்டார் வாகனத்தை ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாவிற்கு அடகு வைத்துள்ளார்.
அதனை மீட்பதற்கு பணம் இல்லாத காரணத்தால் தனது அயல் வீட்டில் கொள்ளையிடுவதற்கு தனது இரு நண்பர்களின் உதவியுடன் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, குறிப்பிட்ட வீட்டில் 80 வயது முதியவரும் 70 வயதுள்ள அவர் மனைவியும் வசித்துவந்துள்ளனர்.
இவர்களது மகன் மற்றும் மருமகள் அவர்களது 12 வயது மகளுடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளனர். சம்பவதினம் மகனும் மருமகளும் தமது தொழிலுக்காக வெளியே சென்றுள்ளனர். தமது வீட்டு அறையை அவர்கள் மூடிவிட்டுச்சென்றுள்ளனர்.
வயோதிபத் தம்பதியினர் 12 வயது பேத்தியுடன் வீட்டில் இருந்துள்ளனர். அந்நேரம் பார்த்து இருவர் வீட்டுக்கு வந்து தாம் சி.ஐ.டி பொலிஸார் என்றும் வீட்டில் டொலர் ஒருதொகை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்,
எனவே வீட்டை சோதனை இடவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இது விடயமாக சந்தேகம் ஏற்பட்ட வயோதிபத் தம்பதியினர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
எனவே வீட்டிலிருந்தவர்களை பலவந்தமாக அமரவைத்து அறையின் சுவர் மேல் ஏறிக் குதித்து மூடப்பட்ட அறையினுள்ள புகுந்து சோதனை செய்வதுபோல் பானைசெய்து தங்க நகைகளைத் தேடியுள்ளனர்.
அங்கிருந்த அலுமாரியை உடைக்க முடியாத நிலையில் அவர்கள் அறையை விட்டு வெளியேறியுள்ளனர். இது தொடர்பாக அளவத்துகொடைப் பொலிஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் சி.சி.ரி.வி காட்சிகள் மூலம், கண்டி சுதும்பொல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை இனம் கண்டு கைது செய்துள்ளனர். அவர் வழங்கிய தகவல்களின் படி பக்கத்து வீட்டிலுள்ள நண்பரின் தேவைக்காக
இந்த நாடகத்தை மேற்கொண்டு தங்க நகைகளை கொள்ளையிட முயற்சித்த சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. அதன் அடிபடையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கண்டி நீதவான் முன் ஆஜர் செய்தபோது விளக்கமறியலில் வைக்கும் படி நீதவான் உத்தரவிட்டார்.
மற்றைய சந்தேக நபரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.