24 மணிநேரத்தில் 700 ரஷ்ய படைகளை சூறையாடிய உக்ரைன் படை
உக்ரைன் நாட்டின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய 700 ரஷ்ய படையினர்
போர் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஆயுதப்படை அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இரு நாட்டுக்கு இடையிலான போர் தாக்குதல் இன்னும் சில நாட்களில் ஓராண்டை கடக்க இருக்கும் நிலையில், உக்ரைன் எல்லை பகுதிகளில் ரஷ்யா கிட்டத்தட்ட 5,00,000 இராணுவ துருப்புகளை அண்மையில் மீண்டும் குவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கத்திய நாடுகளும் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட, உதவியாக டாங்கிகள், ஏவுகணைகள், போர் விமானங்கள் ஆகியவற்றை வழங்க முன்வந்துள்ளனர்.
இந்நிலையில் உக்ரைன் மீதான அத்துமீறிய போர் தாக்குதல் ஆரம்பித்த நாள் முதல் இதுவரை சுமார் 1,31,290 ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைனிய ஆயுதப் படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் மட்டும் அதாவது கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் நடத்திய எதிர்ப்பு தாக்குதலில் மட்டும் சுமார் 700 வீரர் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நேற்றைய தினம் ரஷ்யா கூடுதலாக இரு டாங்கிகள், 11 ஆயுத கவச வாகனங்கள், 6 ஏவுகணை அமைப்புகள், 2 ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், 2 தந்திரோபாய-நிலை ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் 10 டிரக்குகள் மற்றும் டேங்கர்கள் ஆகியவற்றை இழந்து இருப்பதாக உக்ரைனிய இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.