15 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு,10 ஆயிரம் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து! எச்சரிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...
புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் 15 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் சுமார் 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
புற்றுநோயாளிகளிற்கு 15 பிரதான மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கின்றன 90 வீதமான மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நாங்கள் சுகாதார அமைச்சிற்கு இது குறித்து அறிவித்துள்ளோம்,இதனுடன் தொடர்புபட்ட வேறு தரப்பினரும் இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்,
எனினும் ஆபத்தில் சிக்குண்டுள்ள மக்களை காப்பாற்ற சுகாதார அமைச்சு எதனையும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்தால் புற்றுநோயை குணப்படுத்தலாம்,கிகிச்சை தாமதமானால் அது பரவும் மருத்துவர்களால் எதனையும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர்,
தனியாரிடமிருந்து மருந்துகளை பெறுமாறு எங்களால் எங்கள் நோயாளிகளை கேட்கமுடியும், ஆனால் எங்கள் நோயாளிகளில் 90 வீதமானவர்களால் அது முடியாது மருந்துகளின் விலை 50,000 ரூபாய்க்கும் அதிகம் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.