பாடசாலை சிற்றுண்டிசாலையில் போதை மாத்திரைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் ஆயுள்வேத வைத்தியர் 5500 போதை மாத்திரைகளுடன் சிக்கினார்..
பாடசாலை சிற்றுண்டிச் சாலைக்குள்ளிருந்து போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது 68 வயதான ஆயுள்வேத வைத்தியர் ஒருவர் சுமார் 5500 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்வத்துஹிரிபிட்டிய, புத்பிட்டிய பாடசாலையொன்றின் சிற்றுண்டிச்சாலையில் போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக இவர் கைது செய்யப்பட்டதாக கம்பஹா குற்றப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மேலும் ஐவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,சந்தேக நபரான ஆயுர்வேத வைத்தியர் மருந்தகத்தை நடத்தி வந்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இவரது மருந்தகத்தை பொலிஸார் சோதனையிட்டபோது
போதையை ஏற்படுத்தக்கூடியதான 5,500 மாத்திரைகள் மற்றும் 55 இலட்சம் ரூபா பணம் பொலிஸாரால் மீட்கப்பட்டதோடு, குறித்த வைத்தியரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.