வடமாகாணத்தில் மின்சாரசபை மின் கம்பங்களில் இணைக்கப்பட்டுள்ள கேபிள் ரீவி வயா்களை அறுக்கிறது மின்சாரசபை..
வடக்கு மாகாணத்தில் மின் கம்பங்களில் இணைக்கப்பட்டுள்ள கேபிள் ரீவி இணைப்பு வயர்களை அகற்றுமாறு இலங்கை மின்சார சபையின் தலைமையகம் வடபிராந்திய அலுவலகத்துக்கு பணித்துள்ளது. அதற்கமைய கேபிள் ரீவி இணைப்பு வயர்களை அகற்றும் பணிகளை மின்சார சபை ஊழியர் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பித்தனர்.
இலங்கை மின்சார சபையின் இந்த திடீர் நடவடிக்கையால் கேபிள் ரீவி வாடிக்கையாளர்கள், தொலைக்காட்சி அலைவரிசைகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் மின்சார சபையின் மின் கம்பங்கள் ஊடாக கேபிள் ரீவி இணைப்பு வயர்கள் செல்கின்றன. இந்த நடவடிக்கைக்கு மின்சார சபை துணை நிற்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் ரீவி வயர்களை அகற்றும் பணிகளை இன்று (5) காலை முதல் முன்னெடுக்குமாறு மின்சார சபையின் தலைமையகம், வடபிராந்திய அலுவலகத்துக்கு நேற்று பணிப்புரை விடுத்தது.
கேபிள் ரீவி இணைப்பு வழங்குவதற்காக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உரிமம் பெற்றவர்களுக்கு கட்டண அறவீட்டுடன் இணைப்பு வயர்களை மின் கம்பங்கள் ஊடாகக் கொண்டு செல்வது தொடர்பில் உரிய செயற்றிட்டம் தயாரிக்கப்படும் வரை இடைநிறுத்துமாறு அரசியல் தலைமையால் பரிந்துரைக்கப்பட்ட போதும் மின்சார சபை தனது தீர்மானத்தில் உறுதியில் உள்ளது.