கேரளாவில் மீள பரவும் பறவை காய்ச்சல்!! -20,471 வாத்துக்களை உடனடியாக கொல்ல உத்தரவு-
கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் மீண்டும் பரவிவரும் நிலையில் அடையாளம் காணப்பட்ட பண்ணையில் உள்ள 20,471 வாத்துக்களை உடன் கொல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் அதிகளவான கோழி மற்றும் வாத்து பண்ணைகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள சில பண்ணைகளில் உள்ள வாத்துக்களுக்கு ஏவியன் புளூ எனப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக அந்த பண்ணைகளில் சுகாதார துறையினர் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் நோய் பாதிப்புக்கு ஆளான பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள தேசிய ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த பரிசோதனையில் வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது.
இந்நிலையில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பண்ணைகளில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளையும் உடனடியாக கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சுமார் 20,471 வாத்துக்கள், கோழிகள் கொல்லப்பட உள்ளன.