கோவையில் 5 இடங்களில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம்!! -பொலிஸ் பரபரப்பு தகவல்-
கோவையில் தீபாவளி பண்டிகையின்போது பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக பெலிஸார் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளனர்.
கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு தீபாவளிக்கு முதல் நாள் காரில் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. இதில் அதே பகுதியில் வசித்து வந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பவர் உயிரிழந்தார். பலியானவர் வீட்டில் சோதனை நடத்திய வேளை 75 கிலோ வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து பொலிஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது சிறு டைரியை பொலிஸார் மீட்டனர்.
அந்த டைரியை ஆய்வு செய்த போது சங்கேத குறியீடுகள், பல ரகசிய தகவல்கள் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக 'சுற்றுலா தலங்கள்' என்ற சங்கேத குறியீட்டு பெயரில் கோவையில் உள்ள 5 முக்கிய இடங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.
கோவை ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்கள் அந்த டைரியில் இடம் பெற்றிருந்தன. குறித்த இடங்களில் முபின் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்று பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இவ்விடயம் குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.