புலமைப் பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் தொடர்பிலும் விடுமுறைகள் தொடர்பிலும் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!
2022ம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் தொடர்பான நடவடிக்கைகள் எவ்வாறு நடக்கவுள்ளன என்பது தொடர்பான அறிவிப்பு ஒன்றினை கல்வியமைச்சு விடுத்திருக்கின்றது.
மேலும், 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை எவ்வாறு ஆரம்பிக்கப்படும் மற்றும் முடிவடையும் என்பது தொடர்பிலும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், க.பொ.த. உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் (2023) ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (24) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்ப் பாடசாலைகளின் தேவை கருதி, ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை விடுமுறை வழங்கலாம் என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அதற்கு பதிலாக ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விடுமுறை அளிக்கும் பாடசாலைகளின் அதிபர்கள் அது தொடர்பில் பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.