தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு!! -4 அதிகாரிகள் இடைநீக்கம்-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் ஆய்வாளர் உள்பட 4 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2018 இல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், 13 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சட்டப்பேரவையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவர் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் பொலிஜார் வரம்பை மீறி செயல்பட்டதாக நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார்.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய சுடலைகண்ணு மற்றும் சங்கர், சதீஷ் ஆகிய பொலிஸாரையும் இடைநீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.