ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி!
பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்றிருக்கும் காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும், குற்றமிழைத்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரைத் தண்டிக்குமாறும் கடந்தகால ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்றுவரை முப்படைகளைச் சேர்ந்த எத்தனை பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்? எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள்? என்று நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜரான முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளைச்செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து, ஓய்வுபெற்ற மாவட்டச்செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் யாழ்நகர முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜரான ஒஸ்டின் பெர்னாண்டோ, தான் கடந்த 2001 ஆம் ஆண்டில் பாதுகாப்புச்செயலாளராகப் பணியாற்றியபோது பெற்ற அனுபவங்கள், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை, உடலாகம, தருஸ்மன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளடங்கலாக கடந்த காலங்களில் இயங்கிய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள், உண்மையைக் கண்டறிவதிலும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதிலும் இலங்கை அரசாங்கம் அடைந்த தோல்வி, இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றைப் புதிதாக ஸ்தாபிப்பதில் காணப்படும் சவால்கள், அவ்வாறு ஸ்தாபிப்பதாயின் மிகமுக்கியமாகக் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அதன்படி ஆணைக்குழுவின் முன்னிலையில் அவரால் எடுத்துரைக்கப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:
பாதுகாப்புச்செயலாளராகப் பதவி வகித்த 2001 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியிலேயே நான் இவ்விவகாரங்களுடன் மிகநெருக்கமாகத் தொடர்புபட்டேன். அக்காலப்பகுதியில் ஒருபுறம் இராணுவத்தினரையும் மறுபுறம் தமிழீழ விடுதலைப்புலிகளையும் கையாள வேண்டியிருந்தது.
அதனைத் தொடர்ந்து போர் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் உடலகம ஆணைக்குழு, தருஸ்மன் ஆணைக்குழு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்றவற்றால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள பல முக்கிய கண்டறிதல்களையும், பரிந்துரைகளையும் நான் வாசித்திருக்கின்றேன்.
இருப்பினும் அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்திருக்கின்றது. குறிப்பாக பாதுகாப்புப்படையினரிடம் சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட நபர்களில் காணாமலாக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும், குற்றமிழைத்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரைத் தண்டிக்குமாறும் சில அறிக்கைகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
போர் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், முப்படைகளைச் சேர்ந்த எத்தனை பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள்? இவ்விடயத்தில் அரசாங்கங்கள் பொய்யுரைத்திருக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றைப் புதிதாக ஸ்தாபிப்பது குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருவதுடன் அவற்றில் சில விமர்சனங்கள் நியாயமானவையாகும்.
குறிப்பாக காணாமல்போனோரின் எண்ணிக்கை தொடர்பில் தருஸ்மன் அறிக்கையில் தவறான தரவுகள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதுடன், நானும் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். எனவே படையினரிடம் சரணடைந்த பலர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தவேண்டும். அதேபோன்று இந்தக் குற்றங்களை இழைத்தவர்கள் இன்னமும் இராணுவத்தில் அங்கம் வகிக்கக்கூடும்.
எனவே முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் இச்சம்பவங்கள் தொடர்பில் முக்கிய சில தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் என்பன பற்றிய விசாரணைகளை முன்னெடுப்பதன் ஊடாகவே அவைகுறித்த உண்மையைக் கண்டறியமுடியும்.
அதனையே சர்வதேச சமூகமும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துமாறு கோருகின்றது. அதனை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினை என்ன? இருப்பினும் அரசியல் ரீதியிலான பக்கச்சார்பான தன்மையும், தமது வாக்கு வங்கியை உயர்த்திக்கொள்வதற்காக அதனைப் பயன்படுத்திக்கொள்வதும் அரசாங்கங்கள் அடைந்திருக்கும் தோல்விக்கான பிரதான காரணமாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30ஃ1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்கள் எவையும் அத்தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்ட கடந்த 2020 ஆம் ஆண்டு வரையான 5 வருடகாலத்தில் பெருமளவிற்கு நிறைவேற்றப்படவில்லை.
விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளில் பலியானவர்கள் தொடர்பில் உண்மையை அறிவதற்கும், நீதியைப் பெறுவதற்குமான உரிமை அவர்களது உறவினர்களுக்கு இருப்பதைப்போன்று திருகோணமலை 5 மாணவர் விவகாரம், 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட மேலும் பல சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிவதற்கான உரிமை பாதிக்கப்பட்ட தரப்பினரின் உறவினர்களுக்கு இருக்கின்றது.
சுமார் 12,000 முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வளிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் அலி சப்ரி கூறுகின்றார். ஆனால் பாதுகாப்புப்படையினரின் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்ப்பட்டிலையே மக்கள் கோருகின்றார்கள். இவற்றுக்கிடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் புதிதாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதாக இருந்தால், அதனை பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உரிய நியமங்களுக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படவேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக ஆணைக்குழுவிற்கான ஆணையாளர்களின் தெரிவு நியாயமான முறையில் இடம்பெறுவதுடன் அவர்கள் பாதிக்கப்பட்ட தரப்பினரின் உணர்வுகளையும் கடந்தகால நிகழ்வுகளையும் புரிந்துகொள்ளக்கூடியவர்களாக இருக்கவேண்டும்.
அடுத்ததாக அந்த ஆணைக்குழுவானது தாம் அழைப்பதற்கு விரும்புபவர்களை அழைப்பதற்கும், முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான சுதந்திரம் உள்ளடங்கலாக நிதியியல் ரீதியிலான மற்றும் செயற்பாட்டு ரீதியிலான சுதந்திரத்தைக் கொண்டிருக்கவேண்டும்.
அடுத்ததாக புதிதாக உருவாக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எமது நாட்டின் பல்லினத்தன்மை, மொழி, கலாசார பாரம்பரியம், மக்களின் சிந்தனைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் உள்வாங்கி அதற்கு ஏற்றவாறு உருவாக்கப்படவேண்டும். அத்தோடு அது பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதாகவும், அதன் செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் அமையவேண்டும்.
மேலும் ஆணைக்குழு சட்டத்துறை சார்ந்தோர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினருடன் கலந்துரையாடிச் செயற்படவேண்டியது அவசியமாகும். நிறைவாக இவ்வாறானதொரு ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதாயின் அதன்மூலம் தீர்வைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற அரசியல் ரீதியான எண்ணப்பாடு காணப்படவேண்டுமே தவிர, வெறுமனே வெளித்தரப்பினருக்குக் காண்பிப்பதற்கான ஓர் உத்தியாக அதனைப் பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தினார்.