கேரளத்தில் மேலும் 12 பெண்கள் நரபலி!! -பொலிஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்-

ஆசிரியர் - Editor II
கேரளத்தில் மேலும் 12 பெண்கள் நரபலி!! -பொலிஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்-

இந்தியாவின் கேரளத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

கேரள வீதிகளில் அதிஸ்டலாப சீட்டு விற்றுக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த பத்மா, கலடி பகுதிகளைச் சேர்ந்த ரோஸிலின் ஆகியோர் கடந்த ஜூன் மாதத்திலும், செப்டம்பரிலும் காணாமல் போனதாக பதிவான முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது.

செல்வம் பெருக நரபலி கொடுக்க வேண்டும் என்று பெரம்பவூரைச் சேர்ந்த முகமது சபி என்பவர் கூறியதைக் கேட்டு, திருவல்லாவைச் சேர்ந்த பகவல் சிங் - லைலா தம்பதி, அவர்களின் வீட்டில் வைத்து அந்த இரு பெண்களையும் கொலை செய்து, எலந்தூர் கிராமத்தில் புதைத்துள்ளனர்.

பொலிஸாரால் விசாரணையில், முக்கிய குற்றவாளியான சபி மற்றும் தம்பதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், சபி மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருப்பதால், வேறு யாரையாவது நரபலி கொடுத்துள்ளாரா என்ற கோணத்தில் பொலிஸார் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு முதல் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மட்டும் 15 பெண்கள் மாயமாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பத்மாவும், ரோஸிலினும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 பேரின் நிலை இதுவரை மர்மமாகவே உள்ளது. 

அந்த 12 பெண்களையும் சபி நரபலி கொடுத்திருக்க வாய்ப்புள்ளதாக கருதும் பொலிஸார் விசாரணையை முடுக்கியுள்ளனர். மேலும், சபி உள்ளிட்ட மூவரையும் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவெடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் நரபலி விவகாரத்தை கவனித்து வரும் நிலையில், மேலும் 12 பெண்கள் குறித்த மர்மம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு