தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தெரிவு!! -துணை பொதுச்செயலாளராக கனிமொழி-

ஆசிரியர் - Editor II
தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தெரிவு!! -துணை பொதுச்செயலாளராக கனிமொழி-

தி.மு.க தலைவராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதே வேளை துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெறும் பொதுக்குழுவில் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தி.மு.க. தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பொதுச்செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி.யும் மீண்டும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.

மேலும், தி.மு.க துணை பொதுச்செயலாளர்களாக 4 பேர் இருந்தனர். அதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டார். எனவே, அந்த இடத்துக்கு புதிதாக ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். 

இந்த நிலையில், சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பாடசாலை வளாகத்தில் தி.மு.க பொதுக்குழு இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆயிரத்து 600 பொதுக்குழு உறுப்பினர்களும், ஆயிரத்து 500 சிறப்பு அழைப்பாளர்களும் என மொத்தம் 4 ஆயிரத்து 100 பேர் பங்கேற்றனர். 

இந்த நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க கட்சி தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 ஆவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.க பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

இதேபோல், திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் திமுக துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு