பிரிட்டன் ராணி உடல் இன்று அடக்கம்!!
ராணி உடல் இன்று திங்கட்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளிலும் உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி 2 ஆம் எலிசபெத், 96, வயது மூப்பு காரணமாக, 8 ஆம் திகதி இரவு காலமானார். ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் இருந்து அவரது உடல், 14 ஆம் திகதி லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலுக்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
பிரிட்டன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று இரவு பகலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வரிசை மூடப்பட்டது. ஏற்கனவே வரிசையில் இருப்பவர்கள் இன்று திங்கட்கிழமை காலை வரை அஞ்சலி செலுத்தலாம். இந்த வரிசையில் புதிதாக யாருக்கும் அனுமதி அளிக்கப்படாது.
ராணி உடல் அடக்கம் செய்யப்படுவதை முன்னிட்டு, பிரிட்டனில் இன்று திங்கட்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்குகளுக்கான இறுதிக்கட்ட பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.