நகர மண்டபத்தில் சாப்பிட முயற்சித்த 5 சிறுவர்களை முழங்காலில் இருத்தி, பொலிஸாரிடம் ஒப்படைத்த நகர பிதா! இலங்கையில் நடந்த துயர சம்பவம்..
நகர மண்டபத்தில் இடம்பெற்ற விருந்தில் சாப்பிடுவதற்கு முயற்சித்த 5 சிறுவர்கள் முழங்காலில் உட்கார வைக்கப்பட்டதுடன், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் வெலகம நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கு இடம்பெற்ற விருந்து ஒன்றில் 12, 13, 16, 17 வயதுடைய 5 சிறுவர்கள் சமையலறை பக்கமாக சென்று சாப்பிடுவதற்கு முயற்சித்துள்ளனர்.
இதன்போதே அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு முழங்காலில் உட்கார வைக்கப்பட்டதுடன், பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட சிறுமி ஒருவர் கூறியதாவது, “அங்கு நடைபெறும் திருமணங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அவர்கள் சமைக்கிறார்கள்.
மிகுதியாகும் உணவை சாப்பிடுவதற்கு முன்பு அங்கு செல்வது வழமை . சமைத்துக் கொண்டிருந்த ஒரு மாமாதான் எங்களை வந்து சாப்பிடச் சொன்னார்.
அதன்படி நாங்கள் ஐந்து பேரும் கிளம்பியபோது அங்கிருந்த ஒருவர் கொஞ்சம் பொறுங்கள் என்றார். இதற்கிடையில் மேயரும் இன்னும் சிலரும் வந்து எங்களை திட்டிவிட்டு படிக்கட்டுக்கு அருகில் மண்டியிடச் சொன்னார்கள்.
அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் அப்போது மிகவும் அவமானமாக உணர்ந்தோம். சிறிது நேரம் கழித்து பொலிசார் வந்து அழைத்துச் சென்றனர். மூன்று மணி நேரம் கழித்து எங்களை பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள் ” என்றார்.
இது தொடர்பில் வெலிகம நகரபிதாவிடம் கேட்ட போது, குறித்த நபர்கள் சிறுவர்கள் அல்ல எனவும், பலவந்தமாக உணவை எடுத்துச் செல்வதற்காக வந்த குழு எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இச்சம்பவத்தை எதிர்கொண்ட சிறுவர்களுக்கு வெலிகம முன்னாள் மேயர் ரெஹான் ஜயவிக்ரம ருசியான மதிய உணவை வழங்கியதுடன் அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டார்.