யாழ்ப்பாணத்தை மெல்ல.. மெல்ல.. ஆக்கிரமிக்கிறது சீனா...! நாடாளுமன்றில் அம்பலப்படுத்தினார் சிறீதரன்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தை மெல்ல.. மெல்ல.. ஆக்கிரமிக்கிறது சீனா...! நாடாளுமன்றில் அம்பலப்படுத்தினார் சிறீதரன்..

யாழ்.மாவட்டத்தில் கடலட்டை பண்ணைகள் அமைப்பதாக கூறிக் கொண்டு பாரியளவில் நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்தபோஷனை தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

யுத்தம் முடிந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக வடக்கு மற்றம் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற குழந்தைகள் போஷாக்கின்மையோடுதான் பிறந்திருக்கின்றார்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.

இலங்கை அரசுகள் விதித்த மோசமான பொருளாதார தடைகளினால்தான் தமிழர்கள் போஷாக்கற்றவர்களாக வாழ்ந்தார்கள். உரங்கள், எரிபொருள், போஷாக்கு உணவுகள் அனுப்பப்படவில்லை. 

இதனால் எத்தனையோ குழந்தைகள் போஷாக்கின்மையால், பட்டினியால் இறந்தார்கள். இந்தக்காலத்தைப்பற்றி சற்று சிந்தியுங்கள். திட்டமிட்டு தமிழர்கள் மீது இலங்கை அரசுகள் பொருளாதார தடைகளை விதித்த போது எவ்வளவு தூரம் தமிழர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதனை இப்போது சிங்கள சகோதரர்கள் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

இலங்கையில் போஷாக்கின்மையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு முதலிடத்தில் இருப்பது கிளிநொச்சி மாவட்டம். அங்கு இதற்கான மாற்று திட்டங்களை மேற்கொள்ள அரசிடம் என்ன செயற்பாடுள்ளது? அரசு என்ன செய்யப்போகின்றது?

இலங்கைக்கடலில் பிடிக்கப்படும் போஷாக்கான மீனை வடக்கு மக்கள் சாப்பிடுகின்றார்களா? இல்லை. வடக்கில் இன்று கடலட்டைகள் வளர்ப்பதற்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. சீனா என்ற நாட்டின் கோதாவிலே அங்கிருக்கின்ற சில முகவர்கள் ஊடாக நிலங்கள் பிரித்து வழங்கப்படுகின்றன. 

இதனால் அங்கு பாரம்பரியமாக கடற்தொழில் செய்த இடங்கள் எல்லாம் கடலட்டைப்பண்ணைகளாக மாறியுள்ளன. கடலுணவு இல்லாது போய்க்கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் அரியாலைப்பகுதியில் சீனாவின் ஒரு நிறுவனம் அட்டைப்பண்ணையில் கடலட்டை குஞ்சுகளை உருவாக்குகின்றோம் என ஒரு முயற்சி செய்தார்கள். அது தோல்வியில் முடிந்துள்ளது. இப்போது அவர்கள் எழுவைதீவு , அனலைதீவு, புங்குடுதீவு போன்ற இடங்களிலே கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்வதற்காக காணிகளை கேட்கின்றார்கள். 

பல நீரோட்டம் இல்லாத நிலங்கள் தனியாரின் பெயர்களில் சீனாவுக்கு வழங்கப்படுகின்றன. சீனாவின் செயற்பாடுகள் வடக்கில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அதிகமாக அந்த மக்களைப் பாதிக்கின்றது. 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாணவர்களுக்கு நாங்கள் புலமைப்பரிசில் தருகின்றோம் என்று பொய்யான சில சலுகைகளை அறிவித்துக்கொண்டு சீனாவின் நடவடிக்கை இங்கு வாழும் தமிழர்களை இன்னும் போஷாக்கற்றவர்களாக மாற்றுகின்றது.

கடந்த 3 மாதங்களுக்குள் வடக்கு மாகாணத்தில் கிட்டத்தட்ட 1,000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இவ்வாறு கடலட்டை வளர்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ளன . இதன்பின்புலத்தில் சீனா உள்ளது. ஆனால் சீனாவின் இலங்கைக்கான தூதுவர் ''டுவிட்'' செய்த விடயத்தை மையமாகக்கொண்டு கடந்த 2022-08-30 யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒரு அறிக்கை வெளியிட்டது. 

தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் தொடர்பில் இலங்கைக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கொச்சைப்படுத்தும் விதத்திலும் சீனத்தூதுவர் கருத்து வெளியிட்டிருந்தார் என அவர்கள் கூறியிருந்தனர்.

அழிக்கப்பட்டுள்ள, படுகொலைசெய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் தொடர்பில் ஜெனீவாவில் பிரேரணை வருகின்றபோது இளநகைக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருக்கும் சீனா இன்னொரு புறத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற தமிழ் இளைஞர்களின் கல்விக்கு தான் 5000 ரூபா பணம் கொடுப்பதை பெரிய விடயமாக காட்டுகின்றது. 

மீனவர்களுக்கு 4,000 ரூபா கொடுப்பதை பெரிய செய்தியாக்குகின்றது. ஆனால் நாம் செத்துக்கொண்டிருக்கின்றோம். நாம் போஷாக்கின்மையாலும் சாகின்றோம். வாழ்வாதாரமின்றியும் சாகின்றோம். 

எண்களின் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கின்றது. இலங்கையின் அமைதியின்மையில் சீனாவின் மறைக்கரங்கள் இன்னும் இன்னும் அகோரமாக இருக்கின்றது. இது மிகவும் மோசமானது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு