வடிகாலில் விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்!
14 வயதான பாடசாலை மாணவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்தார்.
நீரில் மூழ்கியமையினால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குருநாகல் மலியதேவி கல்லூரியில் தரம் 9 – இல் கல்வி கற்றுவந்த சஜித்த குணரத்ன,
பாடசாலை விட்டு வீடு சென்றுகொண்டிருந்த போது துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டார். வீதியில் பயணித்த வேன் ஒன்றுக்கு இடமளிக்க முயன்று, வீதியோரமாக ஒதுங்கியபோது சஜித்த வடிகாணில் வீழ்ந்துள்ளார்.
சஜித்தவை பாதுகாக்க இயன்றளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் அது பலனளிக்கவில்லை. ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் அவரை வடிகாணில் இருந்து வௌியே எடுத்து,
குருநாகல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்த போதும் சஜித்தவின் உயிரை பாதுகாக்க முடியவில்லை. இவர் வெஹர பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் கடைசி பிள்ளையாவார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தை குருநாகல் பொலிஸ் அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர். மழைக்காலங்களில் நீர் வடிந்தோடுவதற்கு குறித்த வடிகாண் போதுமானதாக இல்லையென பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இரண்டு பாடசாலைகளின் மாணவர்கள் பயணிக்கும் வெஹர – கந்தஉடவத்த வீதியில் இவ்வாறான ஆபத்தான பல இடங்கள் இருப்பதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர்.
குருநாகல் மாநகர சபையின் ஆணையாளரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். குருநாகல் நகரில் இருந்த புவனேகபாகு அரசவையை உடைப்பதிலும்
நகரின் பூங்காவில் இருந்த மரங்களை வெட்டுவதிலும் காட்டிய ஆர்வத்தை பிரதேச நிர்வாகிகள் இந்த வடிகாணை அமைப்பதில் காட்டியிருந்தால், இன்று சஜித்தவிற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.