SuperTopAds

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒரு செல்லாக் காசு- ஏமாற்றமே மிஞ்சியது

ஆசிரியர் - Editor III
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒரு செல்லாக் காசு- ஏமாற்றமே மிஞ்சியது

காணாமல் ஆக்கப்பட்டோரின்  போராட்டத்தை மழுங்கடிக்க  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர்.இதில் அவர்களுக்கு இலாபம் உண்டு.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றி வருகின்றார்கள்.செல்லாக் காசான தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இவ்விடயத்தில் தினமும்  நம்பி நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை தற்போது உணர்ந்துள்ளோம் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

அம்பாறை மாவட்டத்தில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டமானது எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலை தெரியும் வரை தொடரவுள்ளது.138 பேரை அம்பாறை மாவட்டத்தில் இழந்து இருக்கின்றோம்.அது மட்டுமல்ல காணாமல் போனோரின் அலுவலகத்தினை நாங்களும் 8 மாவட்டத்தினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் வேண்டாம் என்று உறுதியாக நிற்கின்றோம்.

இருந்த போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலம் வேண்டும் என்று கூறுவதற்கு காரணம் என்ன?இன்று உறவுகளை இழந்து தவித்த  8 மாவட்டங்களை சேர்ந்த   நாங்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.அவர்கள் (தமிழ் தேசிய கூட்டமைப்பினர்) இச்செயலில் இறங்குவதானது எமக்கு மனவருத்தத்தை தருவதுடன் ஆத்திரமடைகின்றோம்.

அது மட்டுமல்ல இந்நாட்டில் இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையை தொடர்ந்து இலங்கை பொறிமுறையில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் நாங்கள் இன்று அனைத்து உலக சர்வதேசத்தை நாடி இருக்கின்றோம்.அதற்கான காரணத்தையும் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கூறி இருக்கின்றோம். இந்த உள்ளக பொறிமுறை விசாரணையை ஏன் விரும்பவில்லை என்ற காரணத்தையும் அங்கு தெளிவாக கூறியுள்ளோம்.ஒன்றுமில்லாத காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் (ஓ.எம்.பி) ஒன்றினை எம்மிடையே திணிக்க இலங்கை அரசு  பார்த்தது.ஒன்றுமே இல்லாத அலுவலகம் என்பதனால் நாங்கள் இன்று வெறுத்திருக்கின்றோம்.

இவ்வாறான அலுவலகங்களை எல்லாம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று ஊக்குவிப்பதற்கான காரணம் என்ன?இன்று அவர்களது கதிரைகளை தக்க வைத்து கொள்ளவா?அடுத்த தேர்தலுக்கு தங்களை தயார்படுத்தி கொள்வதற்கா?என்பது எங்களுக்கு கேள்வி குறியாகவே உள்ளது.ஆகவே  எங்களது விடயத்தில் தயவு செய்து மூக்கை நுழைக்க வேண்டாம்.எங்களுக்கு விடுதலையை பெற்றுத்தர  விரும்பி இருந்தால் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் எங்களது உறவுகளுக்கான நீதி   கிடைத்திருக்கும்.ஆனால் நீங்கள்  கதிரைகளுக்கு ஆசைப்பட்டு அரசுடன் சேரந்து உழைக்கின்றீர்கள்.

எதிர்வரும் 9 ஆம் மாதம் ஜெனிவா கூட்டத்தொடரில் எமக்கான நீதி கிடைக்கும் என நம்புகின்றேன்.இன்று அரசாங்கத்துடன் இணைந்து எங்களது காணாமல் ஆக்கப்பட்டோரின்  போராட்டத்தை மழுங்கடிக்க  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர்.இதில் அவர்களுக்கு இலாபம் உண்டு.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றி வருகின்றார்கள்.

செல்லாக் காசான தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இவ்விடயத்தில் தினமும்  நம்பி நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை தற்போது உணர்ந்துள்ளோம். எனவே தான் கூட்டமைப்பினர் எதுவுமே செய்யாமல் ஏமாற்றுபவர்கள் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.என்றார்.