SuperTopAds

கோடீஸ்வர வர்த்தகர் வீட்டில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை! பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கும் தொடர்பு, வர்த்தகரின் மனைவி குறித்தும் துருவும் பொலிஸார்...

ஆசிரியர் - Editor I
கோடீஸ்வர வர்த்தகர் வீட்டில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை! பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கும் தொடர்பு, வர்த்தகரின் மனைவி குறித்தும் துருவும் பொலிஸார்...

கோடீஸ்வர வர்த்தகர் வீட்டுக்குள் பொலிஸார் என கூறிக்கொண்டு நுழைந்த நபர்களால் நடத்தப்பட்ட பாரிய கொள்ளை சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கும் தொடர்புள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர், கோடீஸ்வர வர்த்தகரின் மனைவி தொடர்பான தகவல்களையும் திரட்டியுள்ளனர். 

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து கோடிக்கணக்கான பணம், நகைகளை ஆயுத முனையில் கொள்ளையிட்டப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கும் நிலையில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் துருவி வருகின்றனர். 

இந்நிலையிலேயே இச் சம்பவத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொடர்புகள் இருப்பதாக புலனாய்வு பிரிவினர் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிக்கையளித்துள்ளனர். 

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முன்னர் சேவையாற்றியவரும் தற்போது அதனை அண்மித்த பொலிஸ் நிலையம் ஒன்றில் சேவையில் இருப்பதாகவும் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு குறித்த கொள்ளையுடன் தொடர்புகள் இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. 

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் உயர் மட்டத்தின் அவதானம் திரும்பியுள்ளது. கொள்ளைக்காக குறித்த வீட்டுக்கு பொலிஸார் எனக் கூறிக்கொண்டு சென்றுள்ள இரு சந்தேக நபர்களும் கையில் வைத்திருந்ததாக கூறப்படும் கை விலங்கினை குறித்த பொலிஸ் உத்தியோகத்தரே வழங்கியிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், 

வர்த்தகரை விசாரிக்கும் முறை, கொள்ளையர்களின் உடை உள்ளிட்டவைகளும் அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் ஆலோசனையே என சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையில், கொள்ளையிடப்பட்ட வீட்டின் உரிமையாளரான வர்த்தகரின் மனைவியின் இரு நண்பிகள் கொள்ளையை திட்டமிட்டதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பின்னணியில், 

உளவுத் துறையினர் வர்த்தகரின் மனைவி தொடர்பிலும் தகவல் சேகரித்துள்ளனர். அது குறித்த தகவல்களையும் உளவுத் துறையினர் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கையளித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.