SuperTopAds

டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் ஓய்வு!!

ஆசிரியர் - Editor II
டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் ஓய்வு!!

அமெரிக்க நாட்டின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் நடைபெறவுள்ள அமெரிக்க ஓபன் தொடருக்கு பின் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 

40 வயதான செரீனா வில்லியம்ஸ்,  23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்று டென்னிஸ் உலகின் ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

ஓய்வு முடிவு குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-

வாழ்க்கையில் வேறு ஒரு திசையில் செல்ல முடிவு செய்ய வேண்டிய நேரம் வரும். நீங்கள் எதையாவது அதிகமாக நேசிக்கும்போது அதை விட்டு விலகும் நேரம் எப்போதும் கடினமாக இருக்கும். நான் டென்னிஸை ரசிக்கிறேன். ஆனால் ஓய்வு பெறுவதற்கான நேரம் நெருங்கியுள்ளது.

நான் ஒரு அம்மாவாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஓய்வு என்ற வார்த்தை எனக்குப் பிடித்ததில்லை. நான் இதை ஒரு மாற்றமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். 

நான் என்ன செய்கிறேன் என்பதை விவரிக்க சிறந்த வார்த்தை பரிணாமம். நான் டென்னிஸிலிருந்து விலகி, எனக்கு முக்கியமான ஏனைய விஷயங்களை நோக்கிப் பரிணமித்து வருகிறேன். 

சில வருடங்களுக்கு முன்னர் நான் செரீனா வென்ச்சர்ஸ் என்ற மூலதன நிறுவனத்தை தொடங்கினேன். அதன் பிறகு நான் ஒரு குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் அந்த குடும்பத்தை வளர்க்க விரும்புகிறேன் என்றுள்ளார்.