SuperTopAds

சாணக்கியன் - சுமந்திரனின் நிகழ்ச்சி நிரல் வேறு, புதிய பாதையில் தமிழ் இளைஞர்கள் பயணிக்கவேண்டும்..!

ஆசிரியர் - Editor I
சாணக்கியன் - சுமந்திரனின் நிகழ்ச்சி நிரல் வேறு, புதிய பாதையில் தமிழ் இளைஞர்கள் பயணிக்கவேண்டும்..!

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் சுமந்திரன் ஆகியோரின் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் வேறாகக் காணப்படுகின்ற நிலையில் தமிழ் இளைஞர்கள் புதிய மாற்றத்திற்கான அரசியலில் பங்கெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை நிஷாந்தன் வேண்டுகோள் விடுத்தார்.

இன்று சனிக்கிழமை யாழ்.ஊடகாமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் எனக்கோரி தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அண்மையில் இலங்கை பூராக பல இடங்களில் கையெழுத்து போராட்டங்களை நடத்தினர்.

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்கள் அனைவருடைய எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்ற நிலையில் வெற்றுத் தாளில் கோடுகள் இட்டு கையெழுத்து வேண்டியதன் பலன் என்ன? சுமந்திரன் சாணக்கியன் தமிழ் மக்களை மடையர்கள் ஆக்கி கையெழுத்து போராட்டம் என்ற போர்வையில் தமது அரசியல் நிகழ்ச்சிகளை சரியாக செய்து முடித்தார்கள்.

நாம் இன்று சனிக்கிழமை நல்லூர் ஆலயம் மூன்றில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழ் மக்களால் போர் குற்றவாளியாக சர்வதேச நீதியில் பேசப்பட்டு வருகின்ற கோட்டபாய ராஜபக்சபை கைதுசெய்ய வேண்டுமென கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்தோம்.

மக்களின் போராட்டத்தால் நாட்டை விட்டு தப்பி ஓடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் அவரை சிங்கப்பூர் அரசாங்கம் கைது செய்ய வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். தமிழின அழிப்பின் பிரதான சூத்திரதாரியாக பேரிடப்பட்டுள்ள கோட்டபாய ராஜபக்ஷ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் 

என்பதே நீதிக்காக போராடும் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பாகும். அந்த வகையில் எமது கையெழுத்து போராட்டம் சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் கையெழுத்திடும் பத்திரத்தில் யாருக்கு வழங்கப் போகிறோம் என தெளிவாக பதிவிட்டுள்ளோம்.

ஆனால் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டுமென சுமந்திரன் சாணக்கியனால் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து போராட்டத்தில் வழங்கப்பட்ட கையெழுத்திடும் தாளில் யாருக்கு வழங்கப் போகிறோம் எனக் குறிப்பிட்டதாக இல்லை. யாருக்கு வழங்கினார்கள் என மக்களுக்கு தெரியவும் இல்லை. 

ஆகவே பாதிக்கப்பட்ட தமிழினம் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகளை தாங்கிச் செல்லக்கூடிய இளம் தலைவர்கள் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.