அன்றைக்கே இந்தியாவுடன் இணைந்து அதை செய்திருந்தால் இன்று எரிபொருளுக்கு மக்கள் வரிசையில் நின்றிருக்கமாட்டார்கள்..!
கடன் வாங்கிக் கொண்டிருப்பதால் நாட்டை முன்னேற்ற முடியாது. ஆகவே கடன்வாங்கும் எல்லையை கட்டுப்படுத்தவேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
மேலும் முன்னைய அரசாங்கம் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முற்பட்டபோது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து அந்த திட்டத்தை கைவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
அன்று அந்த அபிவிருத்தி நடவடிக்கை இடம்பெற்றிருக்குமானால் இன்று எரிபொருள் வரிசைகள் இருந்திருக்காது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைகளை ஆரம்பிக்கும்போதும் அப்போதைய எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை இட்டன.
இதனூடாக பல மரணங்கள் நிகழும் எனவும் குறிப்பிட்டனர். ஆனால் நாங்கள் அதை தைரியமாக முன்னெடுத்தோம். அதனூடாக இன்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
எனவே, நல்ல திட்டங்கள் முன்னெடுக்கும் போது அவற்றை வரவேற்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும் என்றார்.