SuperTopAds

இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுகின்ற விடயங்கள் இருந்தால் நாங்கள் எதிர்ப்போம்

ஆசிரியர் - Editor III
இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுகின்ற விடயங்கள் இருந்தால் நாங்கள் எதிர்ப்போம்

சுமந்திரன் எம்.பி  சீன வேவு கப்பல் தொடர்பில் தெரிவிப்பு 

பொருளாதார நெருக்கடியும்  சமகால அரசியலும் எனும் கருப் பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மக்கள் தெளிவு படுத்தும் கலந்துரையாடல்கள் வட கிழக்கு உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை(31) அம்பாறை மாவட்டம் காரைதீவு கலாச்சார மண்டபத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர்    கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்றன.

இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , இராசமாணிக்கம் சாணக்கியன், தவராசா கலையரசன், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கலந்துரையாடலில்  பங்குபற்றியதுடன்  சமகால அரசியல் போக்கு  8வது ஜனாதிபதி தெரிவும் கூட்டமைப்பின் வாக்களிப்பு தீர்மானம் பற்றிய தெளிவு படுத்தல்களை வழங்கினர்.

இதன் போது அம்பாறை மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழரசுக்கட்சியினரின் இளைஞர் அணி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் சார்பிலான கேள்விகளை முன்வைத்தனர்.

இக்கேள்விகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்  மதியாபாரணம் சுமந்திரன், இரா சாணக்கியன் உள்ளிட்டோர் தெளிவான  விளக்கங்களை இக்கலந்துரையாடலில் முன்வைத்ததுடன் எதிர்வரும் காலங்களில்  மக்கள் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இதே வேளை பாராளுமன்ற உறுப்பினர்  மதியாபாரணம் சுமந்திரன் சீனக்கப்பல் ஒன்றின் இலங்கை விஜயம் குறித்தும் கீழ்வருமாறு தனது கருத்தில் குறிப்பிட்டார்.

அதாவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுகின்ற விடயங்கள் இருந்தால் நாங்கள் எதிர்ப்போம்.அது சீனாவிற்கு நாங்கள் எடுக்கின்ற நிலைப்பாடு அல்ல.இவ்விடயம் பக்கம் சார்ந்து எடுக்கும் நிலைப்பாட்டில் நாம் இல்லை.இவ்வாறான வேவு கப்பல் இலங்கைக்கு வருகை தந்திருப்பதனானது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதிப்பாகவே இருக்கின்றது என்றார்.