வடமாகாணத்துக்கு நேரடியாக எரிபொருளை இறக்குமதி செய்யும் விசேட அனுமதி வழங்கப்படும்! அமைச்சர் காஞ்சன விஜேசேகர உத்தரவாதம்...

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்துக்கு நேரடியாக எரிபொருளை இறக்குமதி செய்யும் விசேட அனுமதி வழங்கப்படும்! அமைச்சர் காஞ்சன விஜேசேகர உத்தரவாதம்...

வடமாகாணத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதி பெற்றுக் கொடுக்கப்படும். என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார். 

வடமாகாண எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இணையத்திற்கும் எரிசக்தி அமைச்சருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. 

மேற்படி சந்திப்பின்போதே அமைச்சர் குறித்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளதாக இணையத்தின் தலைவர் ஜெ.ஸ்ரீசங்கர் கூறியுள்ளார். 

மேலும் இந்த சந்திப்பு தொடர்பாக அவர் கருத்து தொிவிக்கையில், 

இலங்கை அரசு வெளிநாடுகளிலிருந்து நேரடியாக எரிபொருளை இறக்குவதற்கான அனுமதியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது. 

அதற்கு அமைவாக, வடமாகாண எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் இணையம் பல எரிபொருள் இறக்குமதி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருந்தது.

இந்நிலையில் இலங்கை அரசின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரைச் சந்தித்தோம். அவரும் அதற்கு இணங்கியுள்ளார். 

நாம் அவ்வாறு நேரடியாக இறக்குவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தயார் செய்வதாகவும் அவர் கூறினார். 

எரிபொருள் நேரடியாக நாம் இறக்கினாலும், எரிபொருளின் விலையில் மாற்றம் செய்ய முடியாது. அரசால் நிர்ணயிக்கும் விலைக்கே விற்பனை செய்ய வேண்டும்.

இதேவேளை வடமாகாணத்துக்கு மண்ணெண்ணெய் விநியோகம் நீண்டகாலமாக இடம்பெறாமையையும் அமைச்சருக்குச் சுட்டிக்காட்டினோம். 

இதனால் மீனவர்களும், விவசாயிகளும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதை அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைத்தோம்.

இதையடுத்து இரு வாரங்களுக்குள் வடமாகாணத்துக்கு மண்ணெண்ணெய் விநியோகத்துக்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.

என அவர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு