ஒலுவில் மீன்பிடித்துறைமுகத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய ஒலுவில் மீன்பிடித்துறைமுகத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகளை வைபவ ரீதியாக மீள ஆரம்பிப்பத்து வைக்கும் வைபவம் வியாழக்கிழமை (28) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மிக நீண்ட காலமாக தூர்ந்து போயுள்ள மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு மீனவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளதால் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் கனவு நினைவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வகையில் ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டிற்கு தேவையான அந்நிய செலாவணியை அதிகரித்துக் கொள்ள முடியும்.
இத் துறைமுகத்தின் நுழைவாயில் மண்ணால் மூடப்பட்டதையடுத்து அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்ததோடு அபிவிருத்திகளும் தடைப்பட்டிருந்து. மண்ணால் மூடப்பட்டுள்ள நுழைவாயிலிலுள்ள மண்ணை அகற்றி தற்போது ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை நிறுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 500ற்கு மேற்பட்ட ஆழ் கடல் மீனவர்கள் நன்மையடையவுள்ளார்கள்.
மீன்பிடித் துறைமுகம் 03 கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக இப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக மீன் ரின் தொழிற்சாலை அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளது.
துறைமுக நிர்மாணிப்பினால் அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் நீண்ட காலமாக ஏற்பட்டுள்ள கடலரிப்பினால் மீனவர்களும் பொது மக்களும் பல அசௌகரீகங்களை எரிகொண்டு வருகின்றார்கள். இக் கடலரிப்பினை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை தென்கிழக்குப் பல்கலைக்கழக துறை சாரந்த அதிகாரிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சினால் சமர்ப்பித்த அமைச்சரவை யோசனைக்கமைய இத் துறைமுகம் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதையடுத்து இத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.