ஜனாதிபதியானது ஒவ்வொரு ஏழை இந்தியனின் சாதனை -திரௌபதி முர்மு பேச்சு-
ஒவ்வொரு ஏழையும் குடியரசுத் தலைவராக முடியும் என்பதற்கு தனது வாழ்க்கையும் ஒரு முன் உதாரணம் என்று இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 14 ஆவது ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு 15 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
எதிர்க்கட்சிகளின் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார்.
இதில் திரௌபதி முர்மு அமோக வெற்றி பெற்று நாட்டின் புதிய ஜனாதிபதியானார். இன்று திங்கட்கிழமை ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் பேசிய திரௌபதி முர்மு,
'இந்தியாவின் அனைத்து குடிமக்களின் நம்பிக்கைகள், குறிக்கோள்கள், உரிமைகளின் அடையாளமாக நான் இருப்பேன். புனிதமான இந்த நாடாளுமன்றத்தில் இருந்து குடிமக்களை நான் வாழ்த்துகிறேன்.
உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு வலு சேர்க்கின்றன. குடியரசுத் தலைவராக நான் பதவியேற்று இருப்பது ஒவ்வொரு ஏழை இந்தியனின் சாதனை. நான் இந்திய தேசத்தை வளமாக்க பணியாற்றிடுவேன். பழங்குடியினத்தை சேர்ந்த நான் நாட்டின் குடியரசுத் தலைவராக பதவியேற்றது ஜனநாயகத்தின் மகத்துவம்.
சிறிய கிராமத்தில் இருந்து வந்த நான் இந்த பதவிக்கு வந்தது பெருமையான தருணம். நாட்டில் ஒவ்வொரு ஏழையும் குடியரசுத் தலைவராக முடியும் என்பதற்கு எனது வாழ்க்கையும் ஒரு முன் உதாரணம். என்னை குடியரசுத் தலைவராக தெரிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி.' என தெரிவித்தார்.