ஜனாதிபதி செயலகத்திற்குள் புகுந்து விலை உயர்ந்த பழங்கால பொருட்கள் கொள்ளை..! கொள்ளை கும்பலை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தகவல்..
ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்து பெறுமதிவாய்ந்த பழங்கால பொருட்களை திருடிச் சென்ற பிரதான கும்பல் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 9ம் திகதி தொடக்கம் 21ம் திகதிவரை ஜனாதிபதி செயலகத்திற்குள் வந்து சென்றவர்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், சீ.சி.ரீ.வி கமரா பதிவுகளின் அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்தவர்களினால் அங்கிருந்த பல பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் சிசிரிவி காட்சிகளின் உதவியுடன் அங்கு வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி அங்கிருந்த பழங்கால பொருட்களை திருடிச் சென்ற பிரதான கும்பலை பொலிஸார் தற்போது அடையாளம் கண்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகே இது தெரியவந்துள்ளது.புலனாய்வு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அந்த நபர்களை கைது செய்வதற்கான விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் வெடிபொருட்கள் உள்ளதா என்பதை கண்டறிய வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.