காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்..! சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் பல சர்வதேச நாடுகள் சாடல்..
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசிய பிரிவு வன்மையாக கண்டித்துள்ளது.
மெலும் இவ்வாறான சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனவும் இதற்குப் பொறுப்பானவர்கள் உடன் பதவி விலகவேண்டும் என கூறியுள்ளது.
இது குறித்து டுவிட்டர் பதிவில் சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் கூறியுள்ளதாவது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படவேண்டும்,
இலங்கை அதிகாரிகள் உடனடியாக இந்த வன்முறை நடவடிக்கைகளை கைவிடவேண்டும், சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும் பத்திரிகையாளர்கள் கோட்டா கோ கமவிற்குள் நுழைவதை தடுக்ககூடாது.
பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையை செய்வதை தடுப்பது பத்திரிகை சுதந்திரத்தை நேரடியாக மீறும் செயல் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், காலிமுகத்திடல் போராட்டப் பகுதியில் இடம்பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாகவும்,
அமைதிப் போராட்டத்திற்கான மக்களின் உரிமை தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அமொிக்கா கனடா போன்ற நாடுகளும் கண்டனம் தொிவித்துள்ளன.