தாக்குதலை நிறுத்துங்கள், கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவலை வெளிப்படுத்துங்கள்! சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை...
ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுகத்திடல் போராட்டக்களம் ஆகியவற்றில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தும்படி சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.
போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றிற்குள் இராணுவம் இன்று அதிகாலை அதிரடியாக நுழைந்திருக்கின்றது.
இதன்போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சாலிய பீரிஸ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதன்படி தாம் பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபரி ஆகியோருக்கு விடயத்தை தொியப்படுத்தி, தாக்குதலை நிறுத்தும்படி கேட்டுள்ளதாகவும், அனைவரினது பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கேட்டதாகவும்,
அவர் கூறியுள்ளதுடன், தாக்குதலை நிறுத்தி கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு இதன்போது அவர் வலியுறுத்தியதாகவும்,
தேவையற்ற மிருகத்தனத்தை பயன்படுத்துவது சர்வதேசத்திற்கு நல்ல முகத்தை காட்டாது எனவும் கூறியுள்ளார்.