யாழ்.மாநகர காவல்படை வழக்கிலிருந்து முதல்வர் மணிவண்ணன் விடுதலை! சீருடைகளை ஒப்படைக்க நீதிமன்றம் பணிப்பு, மீண்டும் வருகிறதா படை?
யாழ்.மாநகரசபையின் காவல் படை தொடர்பான வழக்கிலிருந்து மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், மாநகர காவல் படையின் சீருடைகளை மீள ஒப்படைக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருக்கின்றது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில், யாழ்.மாநகர சபையினரால் காவல் படை உருவாக்கப்பட்டது. யாழ்.மாநகர சுகாதாரத்தை மேம்படுத்துதல் , குப்பைகளை பொது இடங்களில் வீசுவார்கள், பொது இடங்களில் துப்புவார்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தண்டம் விதித்தல்,
தேவைப்படின் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவே காவல் படை உருவாக்கப்பட்டது. குறித்த காவல் படையின் சீருடையானது தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறையினரின் சீருடையை ஒத்தது என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
முன்னதாக காவல் படையை சேர்ந்தவர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் , தொடர்ந்து யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபனிடமும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதனை தொடர்ந்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை அழைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர்,
முதல்வரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா அழைத்து சென்றனர். விசாரணைகளின் பின்னர் மறுநாள் , முதல்வரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , நீதிமன்றால் முதல்வர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது , வழக்கினை மேற்கொண்டு நடாத்தவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் மன்றுக்கு அறிவித்தமையை அடுத்து யாழ். மாநகர முதல்வரை வழக்கில் இருந்து மன்று விடுவித்து விடுதலை செய்தது.
மேலும் சான்று பொருட்களாக மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்த காவல் படையின் சீருடைகளையும் மாநகர சபையிடம் ஒப்படைக்க மன்று உத்தரவிட்டது.