முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்-கல்முனையில் சம்பவம்
எரிபொருளை நிரப்புவதற்காக வருகை தந்த முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 18.07.2022 அன்று மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை(19) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(22) திகதி வரை சந்தேக நபரான முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் அண்மையில் மட்டக்களப்பு பகுதியில் வங்கி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை ஒன்றில் சந்தேக நபராக இனங்காணப்பட்ட நிலையில் பொலிஸ் சேவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில கல்முனை பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த 56 வயதான சந்தேக நபரான இவர் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பொலிஸ் சீருடை தரித்து வருகை தந்து பல தடவை எரிபொருளை நிரப்பி சென்ற நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கைதாகியுள்ளார்.
குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி மீது அரச ஊழியர் போன்று நடமாடியமை சட்டவிரோதமாக பொலிஸ் சீருடையை அணிந்து நேர்மையீனமாக செயற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த சந்தேக நபர் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் எவ்வாறு சீரூடைகளை பெற்று எவ்வாறு செயற்பட்டார் என்பது தொடர்பில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.