SuperTopAds

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மறுப்பு..! பிரிகேடியர் தர அதிகாரி உட்பட இரு இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை.. இளம் ஊடகவியலாளர் சங்கம் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மறுப்பு..! பிரிகேடியர் தர அதிகாரி உட்பட இரு இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை.. இளம் ஊடகவியலாளர் சங்கம் முறைப்பாடு..

பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்துவதற்கு மறுப்பு தொிவித்த அப்பகுதிக்கு பொறுப்பான 112வது படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் அனில் சோம வீர அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 

கட்டளை தளபதி பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட்ட அவர் இராணுவ தலைமையகத்துக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார். பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ( 15) பதவியேற்று சில மணி நேரத்துக்குள்ளேயே இந்த விடயம் பதிவாகியுள்ளது. 

இதனைவிட, பிரிகேடியர் சோமவீரவுடன் அருகே இருந்தவாறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட்டின் 12 ஆவது உப படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேர்ணல் பி.எச்.ஜீ.பி. குணவர்தனவும் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

கடந்த 13 ஆம் திகதி, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டக்காரர்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது அவர்கள் பிரதமர் அலுவலகத்தை தமது பொறுப்பிலும் கொண்டு வந்தனர். 

இந்த போராட்டத்தின் இடையே, பாதுகாப்புத் தரப்புக்கு போராட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த அனுமதியளிக்கப்பட்டது. எனினும் ஸ்தலத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் சோமவீர, பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த மறுத்திருந்தார். 

இவ்வாறான நிலையிலேயே அவர் உள்ளிட்ட அங்கு கடமைகளில் பொறுப்பாக இருந்த உயர் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து, அவர்கள் கடமைகளில் இருந்து நீக்கப்பட, துப்பாக்கிச் சூடு முன்னெடுக்காமை காரணமா என வெளிப்படுத்தி, 

விடயத்தில் தலையீடு செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் முறைப்பாடளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.