SuperTopAds

கனடாவின் மாநகரசபையில் தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!!

ஆசிரியர் - Editor II
கனடாவின் மாநகரசபையில் தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட தமிழ் இனப்படுகொலை என கியூபெக் மாகாணத்தின் லவால் மாநகரசபை தீர்மானம் நிறைவேறியுள்ளது.

லவால் மாநகர சபையின் அமர்வு கடந்த புதன் கிழமை நடைபெற்ற போது உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

கியூபெக் மாகாணத்தின் லவால் மாநகர சபையில் தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்துக்கான முதலாவது முன்மொழிவு கடந்த ஜூன் 7 ஆம் திகதியன்று சபையில் இடம் பெற்று, தீர்மானம் தொடர்பான தகவல் அடங்கிய நகல் மாநகர சபையின் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.

அன்றைய அமர்வின்போது இனப்படுகொலை இடம் பெற்றமை தொடர்பாக கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் லவால் மாநகர சபையில் வரவேற்கப்பட்டது.

அதனை தொடர்ந்து லவால் மாநகர சபையின் எதிர்க்கட்சியான அக்சன் லவால் சார்பில் சொமெடி உறுப்பினர் அக்லியா ரெப்ளக்கிஸ் அவர்கள் தமிழ் இனப்படுகொலை தொடர்பான சிறப்பு அறிக்கையினை வாசித்தார்.

இலங்கை அரசால் தொடர்ச்சியாக அநியாயமாக தமிழ் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு லவால் மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் லாவால் பொதுமக்களும் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று நடந்த சபையின் அமர்வில் லவால் மாநகர சபையின் எதிர்க்கடசியான அக்சன் லாவல் சார்பில் உறுப்பினர் அக்லியா ரெப்ளக்கிஸ் தீர்மானத்தை சபையில் முன்மொழிந்தபோது லவால் மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களின் வழிமொழிவுடன் தமிழ் இனவழிப்புக்கு எதிரான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தில் கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை போன்று இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெற்றது இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.