இராணுவம் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டமை தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பம்! குற்றத் தடுப்பு பிரிவு..
நாடாளுமன்ற சுற்றாடலில் உள்ள பொல்துவ சந்தியில் நேற்றுமுன்தினம் 13ம் திகதி இரவு இராணுவத்தினரை தாக்கி துப்பாக்கி பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
இராணுவ வீரர் ஒருவரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் 2 மெகசின்கள் மற்றும் 60 தோட்டாக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வெல்லவாய இராணுவ முகாமின் இராணுவ வீரர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டிருந்தார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இராணுவ வீரர் தற்போது இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசேட பொலிஸ் குழுவொன்று இராணுவ வைத்தியசாலைக்கு சென்று சம்பவம் தொடர்பில் குறித்த இராணுவ வீரரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.