வன்முறை கும்பல் பறித்துச் சென்ற 2 துப்பாக்கிகளால் ஆபத்து, இராணுவம் எச்சரிக்கை! இராணுவம் மீது தாக்குதல், இருவர் படுகாயம்...
நாடாளுமன்ற சுற்றாடலில் இடம்பெற்ற போராட்டத்தில் வன்முறையாளர்களால் இராணுவம் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இரு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வன்முறை கும்பலால் பறித்து செல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
"வீரர்கள் இரும்பு மற்றும் மரக் கம்புகளால் தாக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் தலை மற்றும் முகங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,'' என்றார்.
திருடப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி வன்முறைகள் பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மேலும் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்திற்கு அருகாமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் வினவிய போது,
இராணுவ ஊடகப் பேச்சாளர் அந்த செய்திகளை மறுத்துள்ளார். காயமடைந்த அதிகாரிகள் ஆரம்பத்தில் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், தற்போது அவர்கள் நிலையாக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற சம்பவத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.