SuperTopAds

கதிர்காம பாதயாத்திரை குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களுக்கும் வருகை

ஆசிரியர் - Editor III
கதிர்காம பாதயாத்திரை குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களுக்கும் வருகை

யாழ் மாவட்டத்தில் இருந்து வருகை தந்துள்ள  கதிர்காம பாதயாத்திரை குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களையும் தரிசித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் தொண்டமானாறு  செல்வச் சந்நிதி ஆயத்திலிருந்து கடந்த மாதம் புறப்பட்ட யாழ் மாவட்ட  கதிர்காம பாதயாத்திரை குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை    பாண்டிருப்பு திரௌபதை ஆலயத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த பாதயாத்திரீகர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு பயணம் செய்து பின்னர் மட்டக்களப்பில் இருந்து  ஒன்றரை மாதத்தின் பின்னர் குறித்த ஆலயத்திற்கு வந்தடைந்ததுடன் விசேட பூஜைகளிலும் பங்கேற்றிருந்தனர்.

கடந்த  பல  வருடங்களாக பாதயாத்திரைக்கு தலைமை தாங்கி சென்ற வேல்சாமி மகேஸ்வரன் அடியார்கள் இங்குள்ள பல ஆலயங்களில்  தீப ஆராதனைகளை மேற்கொண்டு    தொடர்ந்து  பாதயாத்திரை அடியார்கள்   விசேட பூஜையில் கலந்து கொண்டனர்.

மேலும்  இன்று யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து   பயணித்த வேல்சாமி மகேஸ்வரன்  கதிர்காம பாதயாத்திரைக் குழுவினர் தங்களது பாதயாத்திரையை  அம்பாறை  உகந்தைமலை முருகன் ஆலயத்தை நோக்கி  ஆரம்பித்துள்ளனர்.

  எதிர்வரும் 23 திகதி கதிர்காம காட்டுப்பாதை திறக்கப்படவுள்ள நிலையில் அதிகளவான பாதயாத்திரை பக்தர்கள் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை எரிவாயு உள்ளிட்ட பொதுமக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற கடவுளை இம்முறை நாடி வந்துள்ளதாக பாதயாத்திரிகர்கள் குறிப்பிட்டனர்.